10.5% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்
சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கையின் பொழுது வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு யார் ஆட்சியில் வழங்கப்பட்டது என்பது தொடர்பான காரசார விவாதம் நடைபெற்றது. இதுகுறித்து , திமுக உறுப்பினர் எம்.ஆ
TN Assembly


சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கையின் பொழுது வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு யார் ஆட்சியில் வழங்கப்பட்டது என்பது தொடர்பான காரசார விவாதம் நடைபெற்றது.

இதுகுறித்து ,

திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில்,

10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறவினர்தான் வழக்கு தொடுத்தார் என்ற தவறான தகவலை சி.வி சண்முகம் அவையில் பதிவு செய்துள்ளார் என்றார்.

தொடர்ந்து திமுக கொறடா எ.வ வேலு,

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காக 20% மகத்தான இட ஒதுக்கீட்டை பெற பெரும் முயற்சி எடுத்தவர் மருத்துவர் ராமதாஸ்.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் அழுத்தமான நிலைப்பாடு.

இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்நின்று பணிகளை செய்வார்கள் என்றார்.

அதற்கு அதிமுக எம்.எல்.ஏ சிவி.சண்முகம்,

யார் வழக்கு தொடர்ந்தார்கள்? அதற்கான வழக்கு எண் என்ன? என கேள்விகள் எழுப்பப்படுகிறது.

அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதற்கு நான் பொறுப்பேற்கிறேன் என தெரிவித்தார்.

மேலும், 2021-ஆம் ஆண்டு வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கக்கூடாது எனக் கூறி, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தங்களது தரப்பினர் வெற்றிபெற்றதாகவும், பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோதும் அதே தரப்பினரே வாதாடியதாகவும் சி.வி சண்முகம் தெரிவித்தார்.

இதனிடையே, நீதியரசர் ஜனார்த்தனம், மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கூறியதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், அதற்கும் சிவி சண்முகம் விளக்கமளித்தார்.

2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே, அப்போதைய மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

ஆனால், அந்த கணக்கெடுப்பு முறையாக நடத்தப்படவில்லை. திறந்த முறையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டதால் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வகைகளில் பதிவு செய்யப்பட்டனர்.

இதனால், அன்றைய கணக்கெடுப்பில் சுமார் 46 லட்சம் பேர் தொடர்பான தகவல்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டது” என அவர் தெரிவித்தார்.

சிவி.சண்முகத்தின் இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN