Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச)
கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் யாத்ரா டிராவல்ஸ்' நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 57 பேர் கடந்த 23-ம் தேதி இரவு கைலாஷ் யாத்திரைக்கு புறப்பட்டனர்.
இவர்கள் காத்மாண்டு பகுதியில் 3 வாகனங்களில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கினர்.
இதில், ஒரு வாகனத்தில் பயணம் செய்த 20 பேர் பாதுகாப்பாக உயிர் தப்பினர்.
மற்ற 2 வாகனங்களில் சென்ற 37 பேர் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியதாக தகவல் வெளியானது.
இதில், கடலூரை சேர்ந்த திருமாவளவன் (62) நேற்று (ஆக.27) பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து, 57 பேரில் மொத்தம் 21 பேர் பாதுகாப்பாக உள்ளனர்.
மற்ற 36 பேரை தேடும் பணி 3-வது நாளாக நேற்று காலை தொடங்கியது.
இந்நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட 21 பேர் நேற்றிரவு காத்மாண்டுவில் தனியார் ஹோட்டலில் வந்து தங்கியுள்ளனர்.
அவர்களில் ஓசூரை சேர்ந்த ரகுநாதன் அங்கு தேடப்பட்டு வருபவரின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பதால், அவரைத் தவிர மற்ற 20 பேர் இன்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நாளை (ஆக.29) அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
மேலும், தேடப்பட்டு வரும் 36 பேர் குறித்து காத்மாண்டுவில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் உள்ள ராணுவ அதிகாரிகளின் செல்போனுக்கு, அவர்களது உறவினர்கள் நேரடியாக பேசி, தேடப்பட்டு வருபவர்களின் புகைப்படம், அடையாளங்கள் உள்ளிட்டவற்றை தெரிவிக்க வேண்டும் என காத்மாண்டு ராணுவத்தினர் தெரிவித்ததால், யாத்திரா நிறுவனத்தினர் 36 பேரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, நேபாளத்துக்கு சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் விஜய், மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யவும், தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையைக் கண்டறிந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b