Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கை குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
கைலாய மானசரோவர் யாத்திரைக்காக தமிழ்நாட்டில் இருந்து நேபாளம் சென்ற தமிழர்கள், நேபாள - திபெத் எல்லையோரம் உள்ள ரசுவா மாவட்டத்தில் போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டனர். திபெத் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மீட்புப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர்.
இது தொடர்பாக புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் டெல்லி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாட்டில் இருந்து யாத்திரை சென்றவர்களின் முழு விவரங்களையும் சேகரித்த பின்னர், அவர்களை பத்திரமாக மீட்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
தமிழக அரசு வெளியிட்ட தகவலின்படி, கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா நிறுவனம் மூலம் 57 பேரும், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகாதேவ் கைலாஷ் யாத்ரா நிறுவனம் மூலம் 49 பேரும் என மொத்தம் 106 பேர் நேபாளம் சென்றுள்ளனர். இவர்களில் 103 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், 3 பேர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள்.
இதில் கும்பகோணம் குழுவைச் சேர்ந்த 21 பேர் மட்டுமே இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 85 பேரின் நிலை குறித்து இன்னும் தகவல் இல்லை என்பதால் அவர்களது குடும்பத்தினர் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இந்திய வெளியுறவு அமைச்சகம், நேபாள அரசு மற்றும் டெல்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். மேலும் உறவினர்கள் தொடர்பு கொள்வதற்காக டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b