தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு ராக்கி கட்டிய கொண்டா சுரேகா, சீதக்கா அமைச்சர்கள்!
ஐதராபாத் , 28 ஆகஸ்ட் (ஹி.ச.) தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு அமைச்சர்கள் கொண்டா சுரேகா, சீதக்கா ஆகியோர் ரக்ஷா பந்தன் விழாவையொட்டி ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்தனர். சமீபத்தில் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு எதிராக கொண்டா சுரேகாவின
A


ஐதராபாத் , 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு அமைச்சர்கள் கொண்டா சுரேகா, சீதக்கா ஆகியோர் ரக்ஷா பந்தன் விழாவையொட்டி ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

சமீபத்தில் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு எதிராக கொண்டா சுரேகாவின் மகள் சுஸ்மிதா தெரிவித்த கருத்துகள் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கொண்டா சுரேகா நேரில் சென்று ரேவந்த் ரெட்டியை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

தெலுங்கானாவில் முலுகு மற்றும் பரகாலா பகுதிகளில் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர் கொண்டா சுரேகா பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பரகாலா தொகுதி எம்.எல்.ஏ. ரேவூரி பிரகாஷ் ரெட்டியுடன் கொண்டா சுரேகா தரப்புக்கு ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே, வருகிற சட்டசபை தேர்தலில் பரகாலா தொகுதியில் ரேவூரி பிரகாஷ் ரெட்டிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் ரேவந்த் ரெட்டி பேசியதாக தகவல் வெளியானது.

இதனால் அதிருப்தி அடைந்த கொண்டா சுரேகாவின் மகள் சுஸ்மிதா, கீசுகொண்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் ரேவந்த் ரெட்டி மற்றும் ரேவூரி பிரகாஷ் ரெட்டிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

மேலும், அடுத்த தேர்தலில் பரகாலா தொகுதியில் தான் போட்டியிடப் போவதாகவும் சுஸ்மிதா அறிவித்ததாக கூறப்படுகிறது. முதல்-மந்திரிக்கு எதிராக நேரடியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால், இந்த விவகாரத்தை காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் கொண்டா சுரேகாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த கொண்டா சுரேகா, தனது மகள் தெரிவித்த கருத்துகளுக்கு தான் பொறுப்பல்ல என்று விளக்கம் அளித்தார்.

இருப்பினும், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ரக்ஷா பந்தன் விழாவையொட்டி கொண்டா சுரேகா மற்றும் சீதக்கா ஆகியோர் ரேவந்த் ரெட்டியின் இல்லத்துக்கு சென்று அவருக்கு ராக்கி கட்டினர்.

சமீபத்திய சர்ச்சைக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற்றிருப்பதால், கொண்டா சுரேகாவுக்கும் ரேவந்த் ரெட்டிக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வருவதற்கான சமரச முயற்சியாக இது இருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA