Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
சிங்கரேணி நிலக்கரி சுரங்க தொழிலாளர்களின் நலனில் காங்கிரஸ் அரசு அலட்சியமாக செயல்படுவதாக டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கவிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
சிங்கரேணி தொழிலாளர்கள் கடுமையாக உழைத்து வரும் நிலையில், அவர்களின் நலனில் அரசு போதிய அக்கறை காட்டவில்லை.
குறிப்பாக, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான மருத்துவ வாரிய பரிசோதனை நடவடிக்கையை அரசு வெறும் கண்துடைப்பு நாடகமாக மாற்றியுள்ளது.
சுமார் 120 தொழிலாளர்கள் மருத்துவ வாரியத்தின் முன்பு பரிசோதனைக்கு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் 12 பேர் மட்டுமே பணிக்கு தகுதியற்றவர்கள் (அன்ஃபிட்) என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்குவதில் அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது என்று கவிதா கூறினார்.
மருத்துவ காரணங்களால் பணிக்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்க கோரி விண்ணப்பித்துள்ள தகுதியான அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக ‘அன்ஃபிட்’ என அறிவிக்க வேண்டும். மேலும், அவர்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உரிய ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை கண்துடைப்பு நடவடிக்கைகள் மூலம் அரசு பறிக்க முயன்றால், வரும் நாட்களில் சிங்கரேணி நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் காங்கிரஸ் அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் கவிதா எச்சரித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA