Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உண்மை முழுமையாக வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும், பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் மனநலன் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள தங்கம் தென்னரசு, ஒரு குழந்தையின் இழப்பு எந்தக் குடும்பத்திற்கும் தாங்க முடியாத துயரம் எனத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P