Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை தாம்பரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அன்பழகன் என்ற மைனாகுட்டி மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநீர்மலை அம்பேத்கர் சிலை அருகே உள்ள திமுக மண்டல அலுவலகம் அருகே அன்பழகன் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, 3 இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அன்பழகனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர், அன்பழகன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சங்கர் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அன்பழகனின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
படுகொலை செய்யப்பட்ட அன்பழகன் என்ற மைனாகுட்டி மீது மூன்று கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட காவல்துறை விசாரணையில், முன்விரோதம் காரணமாக அன்பழகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கொலைக்கான காரணம், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தப்பிச் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் குறித்து சங்கர் நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P