Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை பாடி புதுநகர் 10-வது தெருவைச் சேர்ந்த கலாவதி (59) என்பவர் அண்ணா நகரில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 23-ஆம் தேதி இரவு அண்ணா நகரில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டு, இரண்டாவது அவென்யூ வழியாக டவர் மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கி நடந்து சென்றுள்ளார்.
அன்று பெய்த மழையால் சாலையோரத்தில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், மழைநீர் வடிகாலை ஒட்டி தோண்டப்பட்ட சுமார் 2 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்து அவர் உயிரிழந்தார்.
இந்த மரணம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்சாரம் தாக்கியே கலாவதி உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் மின் கேபிள் ஒன்று பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததாகவும், சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் அந்த கேபிளில் இருந்து மின்சாரம் பாய்ந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த பகுதியில் நிலத்தடி கேபிள் லைனும் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இது குறித்து விளக்கம் அளித்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டு விட்டதாகவும், வடிகால் பள்ளத்தில் இருந்து அந்த பெண் மீட்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில், இந்த சம்பவம் சாதாரண மழைக்கால விபத்து என்ற வரையறையைத் தாண்டி, அரசு அமைப்புகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றம், மின்சார பாதுகாப்பு மற்றும் மழைநீர் வடிகால் பணிகளின் கண்காணிப்பு குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த இடத்தில் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் யார், அந்த பணிகளுக்கு பொறுப்பான அரசு ஊழியர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் மின்வாரியத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b