Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
பெரம்பலூர் தீரன் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பல்வேறு அரசியல் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.
வறட்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தையும் வறட்சி பாதித்த மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி பெரம்பலூரில் நடைபெற்ற சிலிண்டர் விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதுபோன்ற சிலிண்டர் விபத்துகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க அரசு கூடுதல் கவனம் செலுத்தி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், இதற்கு காவல்துறை தேவையற்ற தடைகளை விதிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின் பயிர்க்கடன்களை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், இதற்காக தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீரபாண்டியன் வலியுறுத்தினார்.
மதுரை, கோவை மெட்ரோ உள்ளிட்ட கிடப்பில் உள்ள முக்கிய வளர்ச்சித் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேகமலை பிரச்சினையில் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அப்பகுதியின் தொன்மை, இயற்கை வளங்களை பாதுகாக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
வரும் செப்டம்பர் மாதம் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒன்றிய அரசின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உண்மையில் மேம்பட்டுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
முதலீடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், பன்னாட்டு முதலீடுகளால் மட்டும் நாட்டின் வளர்ச்சி உறுதி செய்யப்படாது என்றும், தற்சார்பு மற்றும் உள்ளூர் வளங்களை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சியே நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார். அதேநேரத்தில், முதலீடுகள் என்ற பெயரில் உள்ளூர் தொழில்கள் மற்றும் இயற்கை வளங்கள் அழிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
விஜய் பிரதமர் பதவி தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களது கட்சித் தலைவர்களைப் பற்றி கருத்து தெரிவிப்பது இயல்பான ஒன்றுதான் என தெரிவித்தார்.
இடஒதுக்கீட்டு மானியக் கோரிக்கையில் முக்கிய சமூகத் தலைவர்களான பெரியார் மற்றும் அம்பேத்கர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெறாதது கண்டிக்கத்தக்கது என்றும் வீரபாண்டியன் தெரிவித்தார். சமூக நீதி மற்றும் இடஒதுக்கீட்டு போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த தலைவர்களின் பெயர்கள் மானியக் கோரிக்கையில் மீண்டும் இடம்பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குற்றம்சாட்டினார். அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களில் பதுக்கல் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலையை நிர்ணயித்து, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்தியாவசியப் பொருட்களின் தொடர்ச்சியான விலையேற்றம், ஒன்றிய அரசின் பொருளாதார நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துவதாகும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கடுமையாக விமர்சித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ