திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருப்பு
திருமலை , 29 ஆகஸ்ட் (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், இலவச தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்ட
A


திருமலை , 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், இலவச தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளும் பக்தர்களால் நிரம்பின. இதனால் சிலாத்தோரணம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள் சுமார் 20 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 66 ஆயிரத்து 437 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களில் 26 ஆயிரத்து 771 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்றைய தினம் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.4 கோடியே 45 லட்சமாக இருந்தது.

மேலும், அன்று 3 லட்சத்து 79 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 43 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர்.

திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 746 பேர் சிகிச்சை பெற்றனர்.

பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், டைம் ஸ்லாட் டோக்கன் மற்றும் தரிசன ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு திருமலைக்கு வருமாறு பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA