Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் பசுமைப்பரப்பை அதிகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘கிரீன் எக்ஸிகியூட்டிவ் கமிட்டி’யின் தலைவராக ஜனசேனா கட்சியின் மேலவை உறுப்பினர் நாகபாபு, அமைச்சரவை அந்தஸ்துடன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையடுத்து, அவரது சகோதரரும், ஆந்திரப் பிரதேச துணை முதல்-அமைச்சருமான பவன் கல்யாண், நாகபாபுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
பசுமை நிறைந்த ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்கும் நோக்கில் கூட்டணி அரசு இந்த சிறப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது.
இயற்கையின் மீது மிகுந்த அக்கறை கொண்ட நாகபாபு, தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த முக்கியமான பொறுப்பை திறம்பட நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.
ஆந்திரப் பிரதேசத்தின் புவியியல் பரப்பில் தற்போது உள்ள பசுமைப்பரப்பை, 2047-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்துவது அரசின் முக்கிய இலக்காகும். இந்த மிகப்பெரிய திட்டத்தை நாகபாபு சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசின் ஒரு திட்டமாக மட்டும் இல்லாமல், மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அந்த வகையில், நாகபாபு தனது பொறுப்பில் முழுமையான வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நாகபாபுவுக்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்கி, ஆந்திரப் பிரதேச கிரீன் கமிட்டியின் தலைவராக நியமித்த முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கும், இதற்கு ஆதரவு தெரிவித்த கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு பவன் கல்யாண் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA