ஒய்.எஸ்.ஆர் ஜெகனுக்கு அமைச்சர் லோகேஷ் 10-வது முறையாக சவால்
ஒங்கோல் , 29 ஆகஸ்ட் (ஹி.ச.) ஒய் எஸ் ஆர் ஜெகன் மோகன் ரெட்டி , உங்களுக்கு 10-வது முறையாக சவால் விடுக்கிறேன். விவாதத்துக்கான தேதி, நேரம், இடத்தை நீயே முடிவு செய். புலிவெந்துலாவுக்கு வரச் சொன்னாலும் வருகிறேன். தாடேபள்ளியில் உள்ள உன் வீட்டுக்கு வரச
A


ஒங்கோல் , 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஒய் எஸ் ஆர் ஜெகன் மோகன் ரெட்டி , உங்களுக்கு 10-வது முறையாக சவால் விடுக்கிறேன். விவாதத்துக்கான தேதி, நேரம், இடத்தை நீயே முடிவு செய். புலிவெந்துலாவுக்கு வரச் சொன்னாலும் வருகிறேன்.

தாடேபள்ளியில் உள்ள உன் வீட்டுக்கு வரச் சொன்னாலும் வருகிறேன்.

விவாதத்துக்கு நான் தயாராக இருக்கிறேன்.

நீ தயாரா?” என்று ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிக்கு தெலுங்குதேச கட்சியின் பொதுச்செயலாளரும், கல்வித்துறை அமைச்சருமான நாரா லோகேஷ் சவால் விடுத்துள்ளார்.

ஒங்கோல் சட்டமன்ற தொகுதி தெலுங்குதேச கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய நாரா லோகேஷ், ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்தார்.

ஆந்திரப் பிரதேச பொது சேவை ஆணையத்துக்கும் (APPSC), ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் (DSC) உள்ள வித்தியாசம் கூட தெரியாத ஜெகன் தனக்கு அறிவுரை கூறுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

ஜெகன் போன்ற திறமையற்ற தலைவரை தான் இதுவரை பார்த்ததில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

முந்தைய ஆட்சிக்காலத்தில் டி.எஸ்.சி. தேர்வு தொடர்பாக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டபோதிலும், தாங்கள் தேர்வை வெற்றிகரமாக நடத்தி ஆசிரியர்களுக்கு வேலை வழங்கியதாக லோகேஷ் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மட்டுமல்லாமல், அடுத்த 3 ஆண்டுகளிலும் டி.எஸ்.சி. தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

முந்தைய ஆட்சியில் நடைபெற்ற குரூப்-1 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாகவும் லோகேஷ் தெரிவித்தார்.

வெலிகொண்டா திட்டத்துக்கும் லோகேஷ் தனது உரையில் முக்கியத்துவம் அளித்தார்.

அந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியது சந்திரபாபு நாயுடுதான் என்றும், திட்டத்தை முழுமையாக முடித்து தொடங்கி வைக்கப் போவதும் அவர்தான் என்றும் கூறினார்.

பணிகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்பே முந்தைய அரசு திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததாக குற்றம்சாட்டிய அவர், தற்போது மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு தொகுப்புகளை வழங்கி பணிகளை முடித்து வருவதாக தெரிவித்தார்.

விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சி தொண்டர்கள் தயாராக வேண்டும் என்றும் லோகேஷ் அழைப்பு விடுத்தார்.

சட்டமன்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளைவிட 2 சதவீதம் கூடுதல் வாக்குகளை பெற்று உள்ளாட்சி தேர்தலில் தெலுங்குதேசம் கூட்டணி வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொண்டர்கள் எனக்கு பின்னால் சுற்றாமல், மக்களை சுற்றி சென்று அவர்களுக்காக பணியாற்ற வேண்டும். கட்சியில் பதவிகளை வழங்கும் பொறுப்பு என்னுடையது என்றும் அவர் கூறினார்.

கட்சியின் செயல்பாடுகளை கண்காணிக்க ‘மை டி.டி.பி.’ செயலி மூலம் 4 லட்சம் நிர்வாகிகள் கண்காணிக்கப்படுவதாகவும், கட்சி நிகழ்ச்சிகளை தொண்டர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ஒங்கோல் போதுராஜு கால்வாய் மற்றும் நல்லகால்வாய்களின் மேம்பாட்டுக்காக அடுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் லோகேஷ் உறுதியளித்தார். அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அகந்தையுடன் செயல்பட்டால் மக்களிடம் இருந்து விலக நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஆந்திர மாநிலத்தை முழுமையாக சீரமைக்க தெலுங்குதேசம் கூட்டணி தொடர்ந்து மேலும் 3 முறை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றும் லோகேஷ் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் தெலுங்குதேசம், ஜனசேனா மற்றும் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி 94 சதவீத இடங்களில் வெற்றி பெற்றதாக குறிப்பிட்ட அவர், கூட்டணியின் ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றார்.

சமூக வலைதளங்களில் கூட்டணி கட்சியினர் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அதனால் மாநிலத்துக்கே பாதிப்பு ஏற்படும் என்றும் அறிவுறுத்தினார்.

தன் மீது முந்தைய அரசு 23 பொய் வழக்குகளை பதிவு செய்ததாகவும், அவற்றில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளும் இருந்ததாகவும் லோகேஷ் கூறினார். தான் எந்த அரசியல் கோட்டையையும் நம்பி தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், கடந்த 40 ஆண்டுகளாக தெலுங்குதேசம் வெற்றி பெறாத மங்களகிரி தொகுதியில் போட்டியிட்டு 91 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜெகன் ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளின் காரணமாகவே சில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் தற்போது சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் லோகேஷ் குற்றம்சாட்டினார்.

அவர்கள் தற்போது சாதி அரசியலை முன்வைப்பதாகவும் அவர் விமர்சித்தார். பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை குறைத்ததன் மூலம் 17 ஆயிரம் பேருக்கு பதவி கிடைக்காமல் போனதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அமர்நாத் கவுட், நந்தம் சுப்பையா, தோட்ட சந்திரய்யா ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவங்களையும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர்கள் சீதாரி அப்பலராஜு, காருமூரி நாகேஸ்வரராவ் ஆகியோர் தாங்கள் செய்த தவறுகளாலேயே சட்டரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், அதற்கும் தற்போதைய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் லோகேஷ் கூறினார்.

ஆந்திர மாநிலத்தின் நிதிநிலை தற்போது கடுமையான சூழ்நிலையில் இருப்பதாகவும், அரசுக்கு கிடைக்கும் ஒவ்வொரு ரூபாய் வருவாயிலும் 94 காசுகள் ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவாகும் நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆந்திராவை நாட்டின் முதல் மாநிலமாக மாற்றுவதற்காக தொடர்ந்து உழைத்து வருவதாகவும் லோகேஷ் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பு மந்திரி ஆனம் ராமநாராயண ரெட்டி, ஒங்கோல் நாடாளுமன்ற உறுப்பினர் மாகுண்ட ஸ்ரீனிவாசுலு ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர் தாமச்சர்ல ஜனார்த்தன் மற்றும் தெலுங்குதேச கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA