Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலிருந்து தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்களும், அவர்களின் வரலாறும் நீக்கப்பட்டிருப்பதாக திமுக ஐடி விங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
சமூக நீதிக்காக வாழ்நாளெல்லாம் போராடி, முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வழிகோலிய தந்தை பெரியார், அரசியல் சட்டத்தை உருவாக்கிய புரட்சியாளர் அம்பேத்கர், உண்மையான ஜனநாயகக் காவலர் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்களும் வரலாறும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அறிவாலயத்தில் அம்பேத்கர் சிலை எங்கே? என்று கேட்டவர்கள், இன்று கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலேயே அம்பேத்கர் பெயரை நீக்கியுள்ளனர்.
பெரியார் பற்றி பேச தகுதி இருக்கிறதா? என்று கேட்டவர்கள், இன்று அதே குறிப்பேட்டிலிருந்து தந்தை பெரியார் பெயரையும் நீக்கியுள்ளனர்.
காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு என்று கூறியவர்கள், முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தப் பின்னணியில் முக்கியப் பங்காற்றிய நேருவின் வரலாற்றையே கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்கியுள்ளனர்.
இடஒதுக்கீட்டு வரலாற்றில் அச்சாணியாகத் திகழ்ந்த தலைவர்களின் பெயர்களை அரசாங்க ஆவணங்களிலிருந்து மறைப்பது, நாம் கடந்து வந்த போராட்டப் பாதையையே வரலாற்றிலிருந்து அழிப்பதற்குச் சமம்.
இடஒதுக்கீடு வெறும் சலுகை அல்ல,தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்த சமூகநீதி உரிமை!
வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் இந்நடவடிக்கை, சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத தவெகவின் சினிமா பாணி இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam