Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இருந்து தந்தைப் பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு திமுக சட்டத் துறை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ.பரந்தாமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதியின் வரலாற்றில் முக்கியப் பங்காற்றிய தலைவர்களின் பெயர்களை அரசு ஆவணத்தில் இருந்து நீக்கியிருப்பது வரலாற்றுத் துரோகம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், 1951-ஆம் ஆண்டு இடஒதுக்கீடு தொடர்பான வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெரியார் நடத்திய போராட்டங்களும், அதன் விளைவாக அரசியலமைப்புச் சட்டத்தில் 15(4) பிரிவு சேர்க்கப்பட்ட வரலாறும் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு பிரதமர் ஜவகர்லால் நேருவும், சட்ட அமைச்சர் அம்பேத்கரும் முக்கிய பங்காற்றியதாக முந்தைய கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதைய ஆவணத்தில் அந்த முக்கியப் பகுதி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
நீதிக்கட்சி, வகுப்புவாரி பிரதிநிதித்துவம், பெரியாரின் போராட்டங்கள், இடஒதுக்கீட்டு வரலாறு, மண்டல் கமிஷன் மற்றும் ஒன்றிய அரசு வேலைகள், கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட வரலாற்றுக் குறிப்புகளும் தற்போதைய ஆவணத்தில் தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“சமூக நீதியின் வேர்களையே வெட்டத் துணிந்திருக்கிறார்கள்” என விமர்சித்த பரந்தாமன், பெரியார் மற்றும் அம்பேத்கரை மேடைகளில் பேசுவதற்காக மட்டும் பயன்படுத்திவிட்டு, அவர்களின் சமூகநீதிப் போராட்ட வரலாற்றை அரசு ஆவணங்களில் இருந்து நீக்குவது இரட்டை வேடம் எனக் கூறியுள்ளார்.
நேருவின் பெயர் நீக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சிக்கும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டே பாஜகவின் நிழல் ஆட்சியை தவெக அரசு நடத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இறுதியாக, பெரியார், அம்பேத்கர், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயர்களையும், நீக்கப்பட்ட சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டு வரலாற்றுக் குறிப்புகளையும் மீண்டும் சேர்த்து திருத்தப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என இ.பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P