Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் கோவை குற்றாலம் அருவிக்கு, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் தினமும் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.
இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவிக்கு நீர்வரத்து வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிப்பது மிகவும் ஆபத்தானது என்பதால், பொதுமக்கள் நலன் கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையத்தை இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூட வனத்துறை முடிவு செய்துள்ளது.
நீர்வரத்து குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியவுடன், சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b