Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ‘FQL Trading Wallet’ என்ற ஆன்லைன் செயலி மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் (USDT) முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் எனக்கூறி பொதுமக்களிடம் மோசடி நடைபெற்றுள்ளதாக மதுரை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினசரி அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 12 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், மோசடி செய்யப்பட்ட பணத்தை இழந்த பொதுமக்களுக்கு, அவர்கள் பணம் செலுத்திய வங்கிக் கணக்குகள் உள்ள பகுதிகளிலோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ நேரடியாக புகார் அளிக்கலாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் அடையாளம் தெரியாத ஆன்லைன் செயலிகளை பயன்படுத்தி முதலீடு செய்வதையும், குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறுபவர்களை நம்பி பணத்தை செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக www.cybercrime.gov.in இணையதளம் அல்லது 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN