Enter your Email Address to subscribe to our newsletters

வேளாங்கண்ணி, 29 ஆகஸ்ட் (ஹி.ச)
பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்குகிறது.
கீழை நாடுகளின் லூர்து என்று போற்றப்படும் இந்த புனித தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழா, இன்று ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கி வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இன்று மாலை பேராலய வளாகத்தில் நடைபெறும் சிறப்பு திருப்பலிக்குப் பிறகு, அன்னையின் திருக்கொடி வானுயர ஏற்றப்படும். இந்த கொடியேற்ற நிகழ்வை காண்பதற்காகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர். பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்திருக்கும் பக்தர்களால் வேளாங்கண்ணி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு பேராலய நிர்வாகம் மற்றும் நாகை மாவட்ட நிர்வாகம் இணைந்து விரிவான முன் ஏற்பாடுகளை செய்து வருகின்றன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குடிநீர் வசதி, தற்காலிக பேருந்து நிலையங்கள், சிறப்பு மருத்துவ முகாம்கள், தூய்மை பணிகள் மற்றும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள், தேர்பவனி மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று பேராலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b