நீர்மின் நிலைய ஊழல் வழக்கில் ஈக்வடார் முன்னாள் அதிபர் லெனின் மொரேனோ குற்றவாளி என தீர்ப்பு
ஈக்வடார், 29 ஆகஸ்ட் (ஹி.ச.) ஈக்வடாரில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் கோகா கோடோ சின்க்ளேர் நீர்மின் நிலைய கட்டுமானத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி, 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியது. இந்த ஊழல்
நீர்மின் நிலைய ஊழல் வழக்கில் ஈக்வடார் முன்னாள் அதிபர் லெனின் மொரேனோ குற்றவாளி என தீர்ப்பு


ஈக்வடார், 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஈக்வடாரில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் கோகா கோடோ சின்க்ளேர் நீர்மின் நிலைய கட்டுமானத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி, 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியது.

இந்த ஊழல் வலைப்பின்னலில் மொரேனோ, அவரது குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மற்றும் சீன வணிகக் கூட்டாளிகள், ஈக்வடாருக்கான முன்னாள் சீன தூதர் உட்பட பலர் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நீர்மின் நிலையம் தொடங்கப்பட்டதில் இருந்தே தொழில்நுட்பக் கோளாறுகளை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் ஈக்வடாரின் மிகப்பெரிய நீர்மின் நிலைய கட்டுமானத்துடன் தொடர்புடைய லஞ்ச வழக்கில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் லெனின் மொரேனோ குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் மொரேனோவின் மனைவி மற்றும் மகளும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.

மொரேனோ உட்பட 20 பிரதிவாதிகளுக்கு ஆறு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரியிருந்தனர்.

தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் அறிக்கையின்படி, சினோஹைட்ரோ நிறுவனம் 2009 முதல் 2018 வரை போலி ஆலோசனை ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 7.61 கோடி டாலர் லஞ்சம் கொடுத்துள்ளது.

இந்த நிதி வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மற்றும் வரி சொர்க்கங்களில் உள்ள போலி நிறுவனங்கள் மூலம் மொரேனோவின் குடும்பத்தினர் மற்றும் வணிகக் கூட்டாளிகளுக்கு அனுப்பப்பட்டதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டினர்.

மொரேனோ 2007 முதல் 2013 வரை துணை அதிபராக பணியாற்றியபோது, அவரும் அவரது நெருங்கிய உறவினர்களும் 10 லட்சம் டாலருக்கும் அதிகமாக பெற்றதாக வழக்கறிஞர் தரப்பு தெரிவித்தது.

73 வயதான மொரேனோ, இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறார், திட்டத்தின் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதிலோ அல்லது மேற்பார்வையிடுவதிலோ தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி வருகிறார்.

வழக்கறிஞருக்கு ஒரு ஆலோசனை: நீங்கள் தவறான இடத்தில் தேடுகிறீர்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவர்களைப் பாருங்கள், கமிஷன் கேட்பதை வழக்கமாகக் கொண்டவர்களைப் பாருங்கள், நீங்கள் தவறான இடத்தில் தேடுகிறீர்கள் என்று விசாரணையின் போது மொரேனோ கூறினார்.

2017 முதல் 2021 வரை அதிபராக பணியாற்றிய மொரேனோ, விசாரணையை எதிர்கொள்வதற்காக பராகுவேயில் இருந்து ஈக்வடாருக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b