Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
கடந்த இரு தினங்களாக வினாடிக்கு 6,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்து, ஆற்றின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.
நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள பரிசல் இயக்கத் தடை தொடர்ந்து 14-வது நாளாக நீடித்து வருகிறது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்..
நீர்வரத்து நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் மாவட்ட நிர்வாகம், சூழ்நிலைக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam