நிலம் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான நிலம் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்திற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தம
நிலம் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு


சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான நிலம் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்திற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டம் ஏற்கனவே வரும் 30.08.2026 வரை அமலில் இருந்த நிலையில், தற்போது 30.08.2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.

இந்த சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் நிலமற்ற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி முறைப்படுத்துவதாகும். அதே சமயம், நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகள், புறம்போக்கு நிலங்கள் போன்ற ஆட்சேபகரமான பகுதிகளில் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அவர்களுக்கு மாற்று இடங்களில் வீட்டுமனை வழங்குவதும் இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாக உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இத்திட்டம் தொடர்பாக ஏராளமான முன்மொழிவுகள் அரசுக்கு வந்துள்ள நிலையில், அவை தற்போது தமிழக அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளன.

அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் பட்டா வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, திட்டத்தின் காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நீட்டிப்பின் மூலம் லட்சக்கணக்கான ஏழை குடும்பங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b