தனியார் நிதி நிறுவனம் மோசடி -ரூ.2 கோடிக்கும் மேல் இழப்பு என சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் புகார்
சிவகங்கை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை மாவட்டம் மேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் தனியார் நிதி நிறுவனம், பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறி, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மே
Fql


சிவகங்கை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் மேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் தனியார் நிதி நிறுவனம், பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறி, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

மேலூரைச் சேர்ந்த FQL என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜெண்டுகள் மூலம் பொதுமக்களை மொபைல் செயலி வாயிலாக இணைத்து, அவர்கள் செலுத்தும் பணத்திற்கு இரட்டிப்பு தொகை வழங்கப்படும் எனக் கூறியதாக தெரிகிறது.

இதனை நம்பி சிவகங்கை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியதாகவும், தற்போது தங்களது பணம் திரும்பக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள் நேற்று மேலூரில் உள்ள அந்த நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தாங்கள் செலுத்திய பணம் சுமார் ரூ.2 கோடிக்கும் மேல் இருப்பதாகக் கூறிய அவர்கள், பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாகக் கூறி ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P