Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழக சட்டமன்றத்தின் மாண்பைக் காக்கும் வகையில், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் தங்களது தனிப்பட்ட சாதி, மத அடையாளங்களை சட்டமன்றத்திற்குள் முன்னிறுத்தாமல் செயல்பட வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்,
சட்டமன்ற சபாநாயகர் பதவி என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலையாக செயல்பட வேண்டிய அரசியல் சாசனப் பதவி என்றும், ஆனால் தற்போதைய சபாநாயகர் தனது மத அடையாளத்தை பகிரங்கமாக முன்னிறுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தான் சார்ந்த மதத்தின் ஒரு பிரிவுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தபடியே கோரிக்கை விடுப்பது, அந்தப் பதவியின் நடுநிலைத்தன்மைக்கு ஏற்புடையதல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்திற்கு நீண்ட வரலாறு இருப்பதாகவும், இதற்கு முன்பு பதவி வகித்த சபாநாயகர்கள் தாங்கள் சார்ந்த சாதி அல்லது மத அடையாளங்களை முன்னிலைப்படுத்திப் பேசியதில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தவெக அரசு அமைந்தது முதல், தமிழக அரசு சிறுபான்மையினருக்கான அரசு என்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் செயல்படுவதாகவும், அமைச்சர்கள் சட்டமன்றத்தில் தனிப்பட்ட மத நம்பிக்கைகள் மற்றும் மத அடையாளங்களை முன்னிறுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், அவற்றை சட்டமன்ற நடவடிக்கைகளிலும், அரசியல் சாசனப் பதவிகளிலும் முன்னிறுத்துவது சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் என அவர் கூறியுள்ளார்.
எனவே, இனியாவது சபாநாயகர் மற்றும் தவெக அமைச்சர்கள் தங்களது தனிப்பட்ட சாதி, மத விஷயங்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வராமல், சட்டமன்றத்தின் நடுநிலைத் தன்மையையும் மாண்பையும் காக்கும் வகையில் செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ