நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் -மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதிலயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்திக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடும் வேதனை தெர
Manickam Tagore


சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதிலயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்திக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடும் வேதனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் கடினமாக உழைத்த இளம் மாணவியை இழந்திருப்பது நெஞ்சை உலுக்குவதாக தெரிவித்துள்ளார். மாணவி ஸ்ருதிலயாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதாகவும், அவர்களில் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவக் கனவுடன் நீட் தேர்வு எழுதுவதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் மொத்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 13,999 மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 2025-ஆம் ஆண்டு 76,181 ஆக இருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டு 61,306 ஆகக் குறைந்துள்ளதாகவும், இது 19.5 சதவீத வீழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 15,000 தகுதியுடைய மாணவர்கள் குறைந்திருப்பது, இந்தத் தேர்வு முறையின் மீது மாணவர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதையே காட்டுவதாகவும் மாணிக்கம் தாகூர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

“நீட் தேர்வு என்ற கொடூரமான முறை தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களையும் கனவுகளையும் தொடர்ந்து பறிப்பது எப்போது முடிவுக்கு வரும்?” என கேள்வி எழுப்பியுள்ள அவர், இனி எந்தவொரு மாணவரின் உயிரும் நீட் காரணமாக பறிபோகக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு தொடர்ந்து போராடியும், மாணவர்களின் மரணங்களைக் கண்டும் காணாமல் இருப்பதாக ஒன்றிய அரசை விமர்சித்த மாணிக்கம் தாகூர், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்து, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசையும், ஒன்றிய கல்வி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியையும் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P