Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
நேபாளத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சிக்கியுள்ள புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேரை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, முதலமைச்சர் என். ரங்கசாமி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து 57 பேர் கொண்ட குழு நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டதாகவும், இதில் புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் இடம்பெற்றிருந்ததாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்த சுந்தரி, வைஷ்ணவி ராமசாமி, கீதா ராமசாமி ஆகிய 3 பேரும் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி இரவு நேபாளத்தின் சியாபர்பேசி (Syabrubesi) பகுதியில் இருந்ததாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதி நேபாளம்–சீனா எல்லையை ஒட்டிய பகுதியாகும்.
அதன்பிறகு அவர்களுடன் தொடர்பு கிடைக்காத நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். இதையடுத்து, 3 பேரையும் உடனடியாக கண்டறிந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நேபாளத்தில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக புதுச்சேரிக்கு திரும்புவதற்கான தேவையான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சென்றுள்ள புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேரின் நிலை குறித்து தகவல் கிடைக்காதது அவர்களது குடும்பத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் அவர்களை விரைந்து கண்டறிந்து பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN