ஓணம் முடிந்ததும் வெண்டைக்காய் விலை சரிவு - ரூ.28-ல் இருந்து ரூ.7-ஆக வீழ்ச்சி, விவசாயிகள் கவலை
சேலம், 29 ஆகஸ்ட் (ஹி ச.) சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தேவூர் மற்றும் அரசிராமணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெண்டைக்காய்களின் விலை கடுமையாக சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்தப் பகுதிகளில் அதிக அளவில் வெண்டைக்
Ladi


சேலம், 29 ஆகஸ்ட் (ஹி ச.)

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தேவூர் மற்றும் அரசிராமணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெண்டைக்காய்களின் விலை கடுமையாக சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்தப் பகுதிகளில் அதிக அளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்படும் வெண்டைக்காய்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வியாபாரிகள் தேவூர் மற்றும் அரசிராமணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் மையங்களை அமைத்துள்ளனர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.28 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் ஓரளவு மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது வெண்டைக்காய் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை திடீரென கடுமையாக சரிந்துள்ளது. கடந்த 15 நாட்களாக ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.20 முதல் ரூ.30 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது கிலோ ரூ.7-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் வெண்டைக்காய்கள் லாரிகள் மற்றும் டெம்போக்கள் மூலம் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றன. ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிகரித்திருந்த தேவை தற்போது குறைந்ததாலும், உள்ளூர் மற்றும் வெளிமாநில சந்தைகளுக்கு வெண்டைக்காய் வரத்து அதிகரித்ததாலும் விலை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

திடீரென விலை ரூ.28-ல் இருந்து ரூ.7-ஆக வீழ்ச்சியடைந்துள்ளதால், சாகுபடிக்காக செலவிட்ட தொகையைக் கூட ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், வரும் நாட்களில் வெண்டைக்காய் வரத்து மற்றும் சந்தைத் தேவையைப் பொறுத்து விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ