Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச)
வந்தே மாதரம் பாடலை அவமரியாதை செய்தால் தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுவதாக கூறப்படும் நிலையில், வந்தே மாதரம் மீது திடீரென பாஜகவுக்கு என்ன பாசம்? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
மதுரையில் நடைபெற்ற ‘நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?’ என்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ப.சிதம்பரம் பேசியதாவது:
வந்தே மாதரத்தை அவமரியாதை செய்தால் தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வந்துள்ளனர்.
1947-க்கு முன்பு இந்து மகாசபை, ஜனசங்கம் அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வந்தே மாதரம் பாடியதற்கான பதிவு ஏதேனும் உள்ளதா? இருந்தால் பத்திரிகைகளிலோ அல்லது வரலாற்றுப் பதிவுகளிலோ அதற்கான ஆதாரம் இருக்கும். ஆனால், அத்தகைய பதிவு எதுவும் இல்லை.
சுதந்திரத்திற்குப் பிறகும் பல ஆண்டுகள் மூவர்ணக் கொடியை ஏற்றுக்கொள்ளாதவர்கள், தற்போது திடீரென வந்தே மாதரம் மீது இவ்வளவு பாசம் காட்டுவது ஏன்?
வந்தே மாதரம் பாடலை பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதியிருந்தாலும், அது ஒரு நாவலில் இடம்பெற்ற பாடல். ரவீந்திரநாத் தாகூர் சுதந்திரப் போராட்ட காலத்தில் அதைப் பாடியதன் மூலம் அது மக்கள் மத்தியில் பிரபலமானது. தமிழ்நாட்டில் மகாகவி பாரதியார் தனது பாடல்களுடன் வந்தே மாதரத்தை இணைத்த பின்னரே அது பரவலாக அறிமுகமானது.
வந்தே மாதரம் பாடலில் ஆறு பத்திகள் உள்ளன. முதல் இரண்டு பத்திகள் தேசத்தைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன. அடுத்தடுத்த பத்திகளில் குறிப்பிட்ட மதத்தின் கடவுள் வழிபாடு தொடர்பான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இதனால், ஆறு பத்திகளையும் பாடுவதா அல்லது முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடுவதா என்பது குறித்து அப்போது விவாதம் நடைபெற்றது.
இந்த விவகாரம் குறித்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் விவாதித்தனர். நேரு, ரவீந்திரநாத் தாகூரிடம் கருத்து கேட்டபோது, இரண்டு பத்திகளைப் பாடினால் போதும்; ஆறு பத்திகளையும் பாட வேண்டிய அவசியமில்லை என தாகூர் தெரிவித்தார்.
அதன்பின்னர் மகாத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் பட்டேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் விவாதித்து, வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடுவது என முடிவு செய்தனர்.
இன்றைக்கு நாடாளுமன்றத்தில் ஆறு பத்திகளையும் பாடுகிறார்கள். ஆனால், அந்த வார்த்தைகளை எத்தனை பேர் உண்மையாக அறிந்து பாடுகிறார்கள்? முதல் இரண்டு பத்திகளே பலருக்குத் தெரியவில்லை.
ஜன கண மன 52 விநாடிகளில் பாடப்படுகிறது. வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளை குறுகிய நேரத்தில் பாடிவிடலாம்.
ஆனால், ஆறு பத்திகளையும் பாடினால் சுமார் மூன்று நிமிடங்கள் ஆகும். தமிழ்த்தாய் வாழ்த்து, வந்தே மாதரம், ஜன கண மன என அனைத்தையும் சேர்த்து பாடுவதற்கு தேவையில்லாமல் நீண்ட நேரம் ஆகிறது.
எனவே, மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கொண்டு வரப்படும் இந்த மசோதா தேவையற்றது என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ