தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி புகார் - 4 சம்மனுக்கும் ஆஜராகாத முக்கிய நபர் முத்துக்குமாரை கைது செய்ய போலீஸ் தீவிரம்
சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச) தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் முக்கிய நபரான முத்துக்குமார், காவல்துறை அனுப்பிய நான்கு சம்மன்களுக்கும் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை கைது செய்வதற்கான நடவடிக
High court


சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச)

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் முக்கிய நபரான முத்துக்குமார், காவல்துறை அனுப்பிய நான்கு சம்மன்களுக்கும் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த மோசடி தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளன.

இதுவரை சுமார் 180 தனியார் பள்ளிகள் புகார் அளித்துள்ளதாகவும், இந்தப் பள்ளிகள் ரூ.17.5 கோடிக்கும் மேல் பணத்தை இழந்துள்ளதாக புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மொத்தமாக ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றிருக்கலாம் என்ற புகார்களின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கின் ஒரு பகுதியாக இதுவரை 280-க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய நபர்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் முத்துக்குமாருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நான்கு முறை சம்மன் அனுப்பியுள்ளனர்.

எனினும், அவர் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்காத முத்துக்குமாரை விரைவில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் அரசகுமார், ஆரோக்கியராஜ் என்ற ராஜா மற்றும் சுரேஷ் ஆகிய மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி முத்துக்குமாருடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மேலும் பல தனியார் பள்ளிகளும் இந்த மோசடி தொடர்பாக புகார் அளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், வழக்கின் விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிரப்படுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ