இடஒதுக்கீடு வரலாற்றில் பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்
சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ள இடஒதுக்கீடு வரலாற்றுப் பகுதியில் தந்தை பெரியார், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், பண்டித ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள
Sindhanai


சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ள இடஒதுக்கீடு வரலாற்றுப் பகுதியில் தந்தை பெரியார், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், பண்டித ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஒவ்வொரு துறையும் தங்களது மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்காக கொள்கை விளக்கக் குறிப்பை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இந்த ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்புகளில் இடம்பெற்றிருந்த “இடஒதுக்கீட்டின் வரலாறு” பகுதியில், சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் தந்தை பெரியார், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பங்களிப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

குறிப்பாக, 2024-ம் ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கை குறிப்பேட்டில், 1951-ம் ஆண்டு இடஒதுக்கீடு தொடர்பான வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, தந்தை பெரியார் தமிழகத்தில் நடத்திய போராட்டங்களின் விளைவாக அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தில் 15(4) பிரிவு சேர்க்கப்பட்டதாகவும், பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வழிவகுத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய கொள்கை விளக்கக் குறிப்பில் பெரியார், அம்பேத்கர், நேரு ஆகியோரின் பெயர்கள் மட்டுமின்றி நீதிக்கட்சியின் பெயரும் இடம்பெறவில்லை. இது வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் செயலாகும் என சிந்தனைச் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த மாற்றத்திற்கு அமைச்சர்களை குற்றம்சாட்ட முடியாது என்றும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் என்பதால் துறைச் செயலாளரும், அவரை வழிநடத்தும் தலைமைச் செயலாளருமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“வரலாற்றை அரசியல் வசதிக்கேற்ப எழுதவோ, அழிக்கவோ முடியாது. சமூகநீதிப் பயணம் என்பது ஒரு அரசு அல்லது ஒரு கட்சியின் சாதனைப் பட்டியல் அல்ல; பல தலைமுறைகளின் போராட்ட வரலாறு. அந்த வரலாற்றை முழுமையாகவும் உண்மையாகவும் பதிவு செய்வது அரசின் கடமை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு கொள்கை குறிப்பில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என்றும், வரலாற்று குறிப்பிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டதற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிந்தனைச் செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், தொடர்புடைய துறைச் செயலாளரும் இதுகுறித்து விளக்கம் அளித்து மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P