Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு மைதானம் தொடர்பாக சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் நிர்மல்குமாருடன் ஆய்வு மேற்கொண்ட கருப்பையா, செய்தியாளர்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:
2008 முதல் 2011 வரை நான்கு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
அப்போது திமுக ஆட்சி நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் எடுத்துக்கூறி, உயர்நீதிமன்றம் சென்று ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததில் எனக்கும் முக்கிய பங்கு உள்ளது.
தமிழர்களின் தொன்மையான கலாச்சாரம் மறையக்கூடாது என்றும், இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்தவன் நான். ஜல்லிக்கட்டு மைதானம் என்ற பெயரில் இளைஞர்கள் தவறான பாதைக்கு சென்றுவிடக்கூடாது என்ற ஐயப்பாட்டில்தான் சட்டப்பேரவையில் அந்தக் கருத்தை தெரிவித்தேன்.
அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு போன்ற பகுதிகளில் அந்தந்த இடங்களிலேயே ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு மைதானத்திற்காக செலவிடப்பட்ட பணத்தை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்காக பயன்படுத்தியிருந்தால், ஐந்து மாவட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் பயன்பெற்றிருப்பார்கள். அவர்களின் வாழ்வாதாரமும் உயர்ந்திருக்கும்.
தமிழர்களின் வீரத்தை பறைசாற்றக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டி அழிந்துவிடக்கூடாது.
அந்தந்த கிராமங்களில் இளைஞர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கு நானும் துணையாக இருப்பேன்.
இளைஞர்களை உற்சாகப்படுத்துவதில் நானும் ஒருவன். நானும் ஒரு காலத்தில் மாடுபிடி வீரன்தான். எனவே, மாடுபிடி வீரர்களை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் கிடையாது என்று கருப்பையா தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam