Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, பெருமாள்புரம்பகுதியில் உள்ள அன்பு நகர் சித்தார்த்தர் தெருவைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு மனைவியும், ஸ்ருதி லயா (21) மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மற்றொரு மகளும் உள்ளனர்.
ஸ்ருதிலயா கடந்த 2023ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், 4 வருடங்களாக நீட் தேர்வுக்கு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து, பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இதனையடுத்து சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் 500-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பின்னர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் அவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹரி கிருஷ்ணன் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ”எனது மகள் 2023ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டு நீட் தேர்வுக்காக பயின்று வந்தாள்.
தொடர்ச்சியாக நான்கு முறை நீட் தேர்வு எழுதியும் அவளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவள் மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தாள்.
நானும் எனது மனைவியும் அவளுக்கு ஆறுதல் கூறினோம். கடந்த 27ஆம் தேதி (நேற்று முன்தினம்) அன்று இரவு 8:30 மணியளவில் எனது மகள் ஸ்ருதிலயா வீட்டின் மாடிக்கு சென்று வருவதாக கூறினார்.
சிறிது நேரத்தில் எனது மகளை காணவில்லை என மனைவியும், எனது இளைய மகளும் என்னிடம் கூறினார்கள். அப்போது நாங்கள் அருகில் உள்ள கோயில் பூங்கா மற்றும் கடைகளில் தேடி பார்த்தோம்.
பின்னர் நாங்கள் குடியிருக்கும் வீட்டின் கீழ் தளத்தில் அமைந்துள்ள மருத்துவமனை அறையின் உள்ளே சென்று பார்த்த போது, எனது மகள் ஸ்ருதிலயா உயிரிழந்த நிலையில் இருந்தார். உடனே அவளை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
ஆனால், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். எனது மகளின் இறப்பிற்கு வேறு யாருடைய தூண்டுதலோ, வற்புறுத்தலோ கிடையாது. எனவே, எனது மகளின் உடலை திரும்ப தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறியுள்ளார்.
அப்புகாரின் பேரில் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர், சுருதி லயாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவம் படிக்க இடம் கிடைக்காததால் மனவேதனையில் இருந்த மாணவி, இந்த விபரீத முடிவை எடுத்தாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு எழுதிய மாணவி உயிரிழந்த சம்பவம் திருநெல்வேலியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b