Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவது குற்றமோ அவமதிப்போ இல்லை என்றால், அதே நிலைப்பாடு வந்தே மாதரம் பாடலுக்கும் பொருந்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், காங்கிரஸ் சார்பில் ‘நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் பேசினார்.
அப்போது, வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்கும் விவகாரம் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தொடர்பாக அவர் பேசியதாவது:
“வந்தே மாதரம் பாடல் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே பாடப்பட்டு வருகிறது. அது புதிதாக உருவாக்கப்பட்ட பாடல் அல்ல. அந்தப் பாடலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அரசியல் சாசன நிர்ணய சபையிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் வரலாற்றுப் பின்னணியை கருத்தில் கொண்டு, வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை பயன்படுத்தினால் போதும் என முடிவு செய்யப்பட்டது.
ஆனால், தற்போது வந்தே மாதரத்தின் ஆறு பத்திகளையும் பாட வேண்டும் என கூறப்படுகிறது. அதில் 3 முதல் 6-வது பத்திகள் இந்திய நாட்டை குறிப்பிட்ட மதத்தின் கடவுள்களாக உருவகப்படுத்தி வழிபடும் வகையில் அமைந்துள்ளன. இந்திய அரசியல் சாசனம் மத சுதந்திரத்தை உறுதி செய்கிறது.
எனவே, அந்த வரிகளில் நம்பிக்கை கொண்டவர்கள் பாடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், ஒரு கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், பௌத்தர், நாத்திகர் அல்லது மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை கொண்ட ஒருவர் அந்தப் பாடலை கட்டாயமாகப் பாட வேண்டும் என வலியுறுத்துவது தனிமனித உரிமைக்கும், மத சுதந்திரத்திற்கும் எதிரானது.
தமிழ்நாட்டிற்கு சமீபத்தில் வந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவது குற்றமாகவோ அல்லது அவமதிப்பாகவோ கருதக்கூடாது என கூறியிருந்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதை குற்றமாகவோ, அவமதிப்பாகவோ கருதக்கூடாது என்று கூறுகிறீர்கள். அதே நியாயம் வந்தே மாதரம் பாடலுக்கும் பொருந்த வேண்டாமா? தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பொருந்தும் அதே தர்க்கம் தேசிய கீதத்திற்கும், வந்தே மாதரத்திற்கும் பொருந்த வேண்டும்.
கோயம்புத்தூரில் இருக்கும்போது பச்சைத் தமிழன் என்று பேசிவிட்டு, டெல்லிக்கு சென்றவுடன் வேறு விதமாக பேசுவது நியாயமா?” என்று குடியரசு துணைத் தலைவரை அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய சு.வெங்கடேசன், நாடாளுமன்றத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான மசோதா பட்டியலிடப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால், அவையில் வழக்கமான அலுவல்கள் நடைபெறாது என்பது ஏற்கனவே தெரிந்திருந்த நிலையில், பிற்பகல் 1.30 மணிக்கு திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் அந்த மசோதா கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
வந்தே மாதரம் தொடர்பான விவாதத்தை பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை மாற்றுவது தொடர்பான மசோதாவை உரிய விவாதம் இன்றி நிறைவேற்றியுள்ளதாக சு.வெங்கடேசன் குற்றம்சாட்டினார்.
Hindusthan Samachar / P YUVARAJ