தாம்பரத்தில் வி.சி.க பிரமுகர் அன்பழகன் படுகொலை- 7 பேரிடம் போலீசார் விசாரணை!
செங்கல்பட்டு, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) திருநீர்மலை சாலையில் நேற்று விசிக பிரமுகர் அன்பழகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து சங்கர் நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 2021-ம் ஆ
விசிக அன்பழகன்


செங்கல்பட்டு, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருநீர்மலை சாலையில் நேற்று விசிக பிரமுகர் அன்பழகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து சங்கர் நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு பம்மல் அருகே நாகல்கேணியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கணேசன் (52) வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அன்பழகனும் தொடர்புடையவராக இருந்தது தெரியவந்துள்ளது.

காலி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ய முயன்றபோது கணேசன் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த கொலை நடைபெற்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த வழக்கில் வீனஸ் என்கிற பாலச்சந்தர் முதல் குற்றவாளியாகவும், அன்பழகன் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தனது அரசியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக அன்பழகன் தெரிவித்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களாக இருந்த வீனஸ் மற்றும் அன்பழகன் இடையே யார் பெரியவர் என்பதில் போட்டி ஏற்பட்டதாகவும், அன்பழகன் தொழிலில் வேகமாக வளர்ந்ததால் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சிறையில் இருந்தபோது தனக்கு பழக்கமானவர்களுடன் சேர்ந்து அன்பழகனை கொலை செய்ய திட்டமிட்டதாக ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குரோம்பேட்டை, மண்ணிவாக்கம், பல்லாவரம், நெடுங்குன்றம், காஞ்சிபுரம், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஹரிஹரன், கார்த்திகேயன், விஷ்ணுகுமார், முகேஷ் கண்ணா, விமல், வீனஸ் என்கிற பாலச்சந்தர், ராஜ்குமார் ஆகிய 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலைக்கான காரணம் மற்றும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam