திருச்செந்தூர் ஆவணி திருவிழா கொடியேற்றம் அழைப்பிதழ் படியே நடத்த உத்தரவு
மதுரை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழாவானது ஆகஸ்ட் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 11ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறவிருக்கிறது. இவ்விழாவிற்கான அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்
Madurai High Court


மதுரை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழாவானது ஆகஸ்ட் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 11ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறவிருக்கிறது. இவ்விழாவிற்கான அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் கொடியேற்றம் நடத்தப்படாமல் வேறு நேரத்தில் நடத்தவுள்ளதாகவும், வித்யாதாரர் நிர்ணயித்த நேரத்தில் கொடியேற்றத்தை நடத்த உத்தரவிடக் கோரியும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகி முத்துகிருஷ்ணன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில்,

ஆவணி மகோற்சவ கொடியேற்றம் வருகிற 31ஆம் தேதி காலை 9 மணி முதல் 9.22 மணி வரை நடத்தப்பட வேண்டும் என கோயில் வித்யாதாரர் (சுபமுகூர்த்த நேரத்தை நிர்ணயிப்பவர்) நிர்ணயித்துள்ளார்.

இதற்கான நேரம் பஞ்சாங்கம் மற்றும் திருநாள் முகூர்த்த பட்டோலையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கோயில் நிர்வாகம் தற்போது கொடியேற்றத்தை அதிகாலை 5.15 மணி முதல் 5.40 மணி வரை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்யாதாரர் நிர்ணயித்த நேரத்தை மாற்றியதற்கு உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை.

பாரம்பரியமாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படும் நேரத்திலேயே கோயில் சடங்குகள் நடத்தப்பட்டு வருவதால், தற்போதைய நேர மாற்றம் மத நம்பிக்கைக்கும், பக்தர்களின் உணர்வுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, மாற்றப்பட்ட நேரத்தை குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிட்டு வெளியிடுவதற்கு முன்பாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். 31ஆம் தேதி காலை 9 மணி முதல் 9.22 மணி வரை மட்டுமே கொடியேற்றத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஆர். சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரித்த நீதிபதிகள் அழைப்பிதழ் குறித்து விசாரித்தனர். அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், திருவிழாவுக்கான அழைப்பிதழ் அடிக்கப்பட்டுள்ளதால் அதன்படியே கொடியேற்ற நிகழ்வு நடத்த உத்தரவிட்டனர்.

மேலும் இனிவரும் காலங்களில் கோயில் வித்யாதாரரின் ஆலோசனை பெற வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN