Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
பரந்தூர் விமான நிலையம் மற்றும் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சுட்டிக்காட்டி, வளர்ச்சித் திட்டங்களை மீண்டும் மீண்டும் மறுதொடக்கம் செய்வது தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இந்த வாரத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள் தமிழகத்தின் உள்கட்டமைப்பு எதிர்காலம் குறித்த முக்கியமான தகவலை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக, தேவையான ஒப்புதல்கள் பெறப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கிய நிலையில், தற்போது அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் புதிய இடத்தைத் தேடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கும் நிலையில் இருந்தபோதிலும், தற்போது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு திட்டத்தை மீண்டும் மறுவடிவமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசுகளுக்கு திட்டங்களை மறுபரிசீலனை செய்யும் உரிமை இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ள டி.ஆர்.பி. ராஜா, ஆனால் ஒரு திட்டத்தை மீண்டும் தொடங்குவது என்பது செலவில்லாத நடவடிக்கை அல்ல என தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் திட்டங்களை மறுதொடக்கம் செய்வதால் காலதாமதம், ஒப்பந்த ரீதியான சிக்கல்கள், அதிகரிக்கும் செலவுகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் தாமதமாவது போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவைக்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டு, அவசரமாகவும் திறம்படவும் செயல்பட்டதால்தான் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி உற்பத்தி மாநிலமாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பெரிய கனவுகளைக் காண்பதிலும், திட்டங்களை மேம்படுத்துவதிலும், பிரம்மாண்டமாக கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தவறில்லை என்றும், ஆனால் தமிழகத்தால் ஒவ்வொரு முறையும் திட்டங்களை மீண்டும் ஆரம்ப நிலையில் இருந்து தொடங்கும் நிலையை தொடர்ந்து எதிர்கொள்ள முடியாது என்றும் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
“வளர்ச்சித் திட்டங்களை அரசியலாக்க வேண்டாம்” என்றும் தனது எக்ஸ் பதிவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P