த.வெ.க எம்.எல்.ஏ. கருப்பையா மன்னிப்பு கேட்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து தவெக சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளா
சீமான்


தமிழ்நாடு, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து தவெக சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

ஜல்லிக்கட்டை “இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு” என கருப்பையா பேசியதாக கூறப்படும் நிலையில், தனது கருத்தை உடனடியாக திரும்பப் பெற்று தமிழக மக்களிடம் அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும், அதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்ற கருப்பையாவின் கோரிக்கை நியாயமானது என்றும், அந்த கோரிக்கையை நாம் தமிழர் கட்சியும் ஆதரிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். ஆனால், சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்பதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதுதான் உண்மையான சீரழிவு என்றும், மண்ணோடும், மாடுகளோடும், வேளாண்மையோடும் இளைஞர்களை இணைக்கும் ஜல்லிக்கட்டை சீரழிவு எனக் கூறுவது முரண்பாடானது என்றும் சீமான் விமர்சித்துள்ளார். இளைஞர்களை மதுவை நோக்கி அழைத்துச் செல்லும் சாராயக்கடைகளை மூடுவதற்கு துணிவு உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல என்றும், அது தமிழர்களின் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, நாட்டு மாடு இனங்களின் பாதுகாப்பு மற்றும் கிராமிய பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்த வாழ்வியல் பண்பாடு என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார். ஒரு காளையை ஜல்லிக்கட்டுக்காக விவசாயக் குடும்பங்கள் நீண்ட காலம் பராமரித்து வளர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில் மெரினா உள்ளிட்ட இடங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நடத்திய போராட்டத்தையும் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்களின் அடையாளத்தையும் உரிமையையும் காக்கவே அந்த போராட்டம் நடைபெற்றதாக கூறிய அவர், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர் எழுச்சியையும் “சீரழிவு” எனக் கூறுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam