Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு வனப்பகுதியில், கடல் மட்டத்திலிருந்து 872 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 28.86 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைப் பகுதியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 18 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தினமும் 60.26 எம்.எல்.டி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மொத்தம் 49.53 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில் பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடி வரை மட்டுமே நீர் தேக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போதைய உயர்வு பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது வரும் கோடை காலத்தில் கோவை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பெரிதும் உதவும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b