Enter your Email Address to subscribe to our newsletters

பழனி, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழாவில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் மற்றும் கே.பி. அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், கட்சியில் தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய பதவிகளை ஏற்கப் போவதில்லை என்று அறிவித்தனர்.
பேட்டியின்போது எஸ்.பி. வேலுமணி, துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட புதிய பொறுப்புகளை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை கட்சித் தலைமை ஆராய வேண்டும் என்றும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் இணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என பலமுறை வலியுறுத்தியிருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்தபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய நத்தம் விஸ்வநாதன்,
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 134 எம்.எல்.ஏ.க்களுடன் இருந்த கட்சி, தற்போது படிப்படியாக பலவீனமடைந்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
கட்சி வளர்ச்சியடைந்துள்ளதா அல்லது பின்னடைவைச் சந்தித்துள்ளதா என்பதைத் தலைமை மனசாட்சியுடன் சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டும் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும், நிர்வாகிகளை நீக்கும் நடவடிக்கைகள் கட்சியை மேலும் பலவீனப்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதே நிலை நீடித்தால், தக்க நேரத்தில் தகுந்த முடிவு எடுக்கப்படும் என்றும் முன்னாள் அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P