பைக் டாக்ஸி குறித்து விரைவில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்
மதுரை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரையைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவைகள் தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உயர்நீதிமன்றம்


மதுரை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரையைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவைகள் தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மனுவில், ராப்பிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் மூலம் பைக் டாக்ஸி சேவைகள் தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும், ஆனால் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான தனித்துவமான விதிமுறைகள் அல்லது கொள்கை மாநிலத்தில் இல்லாததால் குழப்பம் நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டது. மேலும், பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது அபராதம் விதித்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், அவர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கும் வகையில் உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும், அதுவரை ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்குவது குறித்து ஒரு குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், அதுவரை பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி இல்லை; விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பைக் டாக்ஸிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை என்றால் அது குறித்து ஏன் பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தவில்லை? அனுமதியின்றி சேவை நடைபெறும் நிலையில் விபத்து ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பு யாருக்கு? என்று அரசுத் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில், பைக் டாக்ஸி சேவைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாகவும், பல மாநிலங்களில் அதை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மாநில அரசு முழுமையாகத் தடை விதிக்க முடியாது; உரிய விதிமுறைகளை உருவாக்கி ஒழுங்குபடுத்தலாம் என்றும் வாதிடப்பட்டது.

விசாரணையின் முடிவில், பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி வழங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், இது தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய போக்குவரத்து துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P