Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
தென்னிந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் ஒகேனக்கலில் காவிரி ஆற்றின் நீர்வரத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 600 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 500 கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மலைப்பகுதியில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தென்மேற்கு பருவமழை கடந்த இரண்டு நாட்களாக சற்று ஓய்ந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவும் குறைந்துள்ளது. இதுவே ஒகேனக்கல் நீர்வரத்து சரிவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
நீர்வரத்து குறைந்தாலும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிஃபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது சற்று குறைந்து காணப்படுகிறது.
இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசலில் சவாரி செய்யவும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நீர்வரத்து 500 கன அடியாக இருப்பதால் பரிசல் இயக்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக உள்ளூர் பரிசல் ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் கர்நாடகாவின் முக்கிய அணையான கபினி அணையில் இருந்து சுமார் 20 ஆயிரம் கன அடி உபரி நீர் நேற்று மாலை திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து இந்த நீர் திறக்கப்பட்டதாக கர்நாடக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நீர் இன்று மாலை அல்லது நாளை அதிகாலைக்குள் ஒகேனக்கல் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கபினி நீர் வந்தடைந்ததும் ஒகேனக்கல் நீர்வரத்து மீண்டும் 2,000 கன அடிக்கு மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b