Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) பிறப்பித்த உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடாத நிலையில், தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 3) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜூலை 28-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 139-வது கூட்டத்தில், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரை 15 நாட்களுக்கு பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கனஅடி நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கர்நாடக அரசு நீர் திறக்க உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது அவசரக் கூட்டத்திலும் உறுதி செய்யப்பட்டது.
ஆனால், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த நீரின் அளவு வினாடிக்கு 158 முதல் 550 கனஅடி வரை மட்டுமே இருந்ததாக தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 3 நிலவரப்படி கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி மற்றும் ஹேமாவதி அணைகளில் மொத்தமாக 77.537 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளதாகவும், இதில் பயன்பாட்டுக்குரிய நீர் 67.517 டி.எம்.சி. இருப்பதால், தமிழ்நாட்டிற்குரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு எந்த சிரமமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 26.954 டி.எம்.சி. நீர் கிடைக்க வேண்டிய நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட 4.536 டி.எம்.சி. மட்டுமே மிகவும் குறைவான அளவு எனவும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டிற்கு விகிதாச்சாரப்படி வழங்கப்பட வேண்டிய நீரை கர்நாடக அரசு வழங்கத் தவறியுள்ளதாகவும், உரிய அளவு நீரை உடனடியாக பெற்றுத்தர தேவையான உத்தரவைப் பெறும் நோக்கில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P