சாதி, மதமற்றோர் சான்றிதழுக்கு சட்டம் இயற்றக் கோரிய இயக்குனர் பார்த்திபன் வழக்கு - 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ் திரையுலகில் வித்தியாசமான படைப்புகளுக்காக அறியப்படும் நடிகர் பார்த்திபன், தான் எந்த சாதியையும், மதத்தையும் சாராதவர் என அறிவித்து அதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் கோரி கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி சோழிங்கநல்லூர் வ
Court orders Tamil Nadu government to respond


சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ் திரையுலகில் வித்தியாசமான படைப்புகளுக்காக அறியப்படும் நடிகர் பார்த்திபன், தான் எந்த சாதியையும், மதத்தையும் சாராதவர் என அறிவித்து அதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் கோரி கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார்.

தனது மனுவில், 1958-ம் ஆண்டு பிறந்த தனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றும், பள்ளிப்படிப்புக்கு பிறகு அதற்கான சான்றிதழ்களையும் பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜாதி, மதம், மொழி அடிப்படையிலான பிளவுகள் தேச ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், எனவே மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் வகையில் தன்னை சாதி மதமற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

அவரது விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ஒரு வாரத்தில் அவருக்கு சாதி, மதமற்றவர் சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி பார்த்திபனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுபோன்ற சான்றிதழ் கேட்பதற்கு பெரிய மனது வேண்டும் என்று பார்த்திபனை பாராட்டியதும், சான்றிதழை விட நடத்தையில் காட்ட வேண்டும் என்று கருத்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சாதி மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்க வேண்டும் என்பதற்காக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி பார்த்திபன் தற்போது பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இது தொடர்பாக நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

Hindusthan Samachar / vidya.b