Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 03 ஆகஸ்ட் (ஹி.ச)
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் செயல்பட்டு வந்த மர அரவை ஆலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான தேக்கு மரங்கள் மற்றும் மரப் பொருட்கள் எரிந்து நாசமாகின.
அதிகாலை திடீரென ஆலையில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீ மளமளவென பரவியதால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான தேக்கு மரங்கள் தீயில் கருகின. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், ஆலையில் இருந்த தேக்கு மரங்கள் முழுமையாக எரிந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் கசிவு உள்ளிட்ட காரணங்களால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், தீ விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் மேட்டுப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ