காஞ்சிபுரம் மாவட்ட தொழிற்சாலைகளில் முதலமைச்சர் விஜய் இன்று ஆய்வு
சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.) முதலமைச்சர் விஜய், பொறுப்பேற்றது முதல் வார விடுமுறை நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தலைமைச் செயலகத்திற்கு நேரில் வந்து, துறை வாரியான ஆய்வுகள், அதிகாரிகளுடனான ஆலோசனைகள் மற்றும் அரசுப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வர
Cm


சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

முதலமைச்சர் விஜய், பொறுப்பேற்றது முதல் வார விடுமுறை நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தலைமைச் செயலகத்திற்கு நேரில் வந்து, துறை வாரியான ஆய்வுகள், அதிகாரிகளுடனான ஆலோசனைகள் மற்றும் அரசுப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

ஏற்கனவே நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கீழ்பாக்கம் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையம், கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை நேரில் ஆய்வு செய்திருந்த முதல்வர் விஜய், அதன் தொடர்ச்சியாக இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொழில் நிறுவனங்களை பார்வையிடுகிறார்.

இன்று இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், மாம்பாக்கம் மற்றும் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காக்களில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நேரில் சென்று, அவற்றின் செயல்பாடுகள், உற்பத்தி திறன், புதிய முதலீடுகள், தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

இந்த ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தொழில் துறை உயரதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகிகள் உடனிருந்து, தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து முதல்வருக்கு விளக்கம் அளிக்கின்றனர்.

மேலும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் முதல்வர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ