காவிரியில் நீரின்றி களை இழந்த ஆடிப்பெருக்கு விழா - கும்பகோணத்தில் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து பக்தர்கள் வழிபாடு
சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச) தமிழர்களின் முக்கியமான நதித் திருவிழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழா, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக கும்பகோணத்தில், காவிர
Kum


சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச)

தமிழர்களின் முக்கியமான நதித் திருவிழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழா, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம்.

குறிப்பாக கும்பகோணத்தில், காவிரி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, ஆற்றில் நீராடி, கலச பூஜை, தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகளை மேற்கொண்டு ஆடிப்பெருக்கை கொண்டாடுவர்.

ஆனால் இந்த ஆண்டு, காவிரி ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால், கும்பகோணத்தில் ஆடிப்பெருக்கு விழா களை இழந்த நிலையில் காணப்பட்டது. ஆற்றுப்படுகை பெரும்பாலும் வறண்டிருந்ததால், பக்தர்கள் வழக்கம்போல் ஆற்றில் நீராடவோ, ஆற்று நீரைப் பயன்படுத்தி பூஜை செய்யவோ முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால், ஏராளமான பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்தே பாட்டில்களில் தண்ணீர் எடுத்து வந்து, காவிரி ஆற்றங்கரையில் வைத்து வழிபாடுகளை நடத்தினர்.

பெண்கள் மஞ்சள், குங்குமம், பூக்கள், பழங்கள், முளைப்பாரி உள்ளிட்ட பொருட்களுடன் பூஜை செய்து, குடும்ப நலன், விவசாய வளம் மற்றும் நல்ல மழை பெய்ய வேண்டி இறைவனை பிரார்த்தனை செய்தனர்.

வழக்கமாக ஆடிப்பெருக்கு நாளில் திருவிழா கோலமாகக் காணப்படும் கும்பகோணம் காவிரி கரை, இந்த ஆண்டு நீரின்றி வெறிச்சோடிய தோற்றத்தில் காணப்பட்டது.

காவிரியில் போதிய நீர் இல்லாததால் விழாவின் பாரம்பரிய உற்சாகம் குறைந்ததுடன், டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் காவிரியில் போதிய நீர் திறக்கப்பட்டு, டெல்டா பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ