கேரளாவில் கனமழை எதிரொலி - அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையிலிருந்து மேலும் 2 குழுக்கள் விரைவு
ராணிப்பேட்டை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.) கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் செயல்பட்
மீட்புப்படை


ராணிப்பேட்டை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) முகாமில் இருந்து மேலும் இரண்டு குழுக்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கனமழையால் இடுக்கி, கேடயம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஏற்கனவே பல்வேறு இடங்களில் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள அரசின் கோரிக்கையைத் தொடர்ந்து, அரக்கோணம் NDRF முகாமில் இருந்து தலா 30 வீரர்கள் கொண்ட இரண்டு சிறப்பு மீட்புக் குழுக்கள், அதிநவீன மீட்பு உபகரணங்கள், உயிர்காக்கும் கருவிகள் மற்றும் தேவையான சாதனங்களுடன் சாலை மார்க்கமாக கேரளாவுக்கு புறப்பட்டன.

இந்த இரண்டு குழுக்களில் ஒரு குழு கேடயம் மாவட்டத்திற்கும், மற்றொரு குழு திருச்சூர் மாவட்டத்திற்கும் சென்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளாவில் தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால், அங்கு மீட்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் இந்த கூடுதல் குழுக்கள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam