கேரளாவில் கனமழை, வெள்ளம் - 15 பேர் பலி 7 பேர் மாயம்
திருவனந்தபுரம் , 03 ஆகஸ்ட் (ஹி.ச.) கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, பத்தனம்திட்டா, கோட்டயம்,
A


திருவனந்தபுரம் , 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற சம்பவங்களில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 7 பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மழை பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, கேரளாவில் அடுத்த சில நாட்களும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகங்கள் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், வெள்ளம் பெருக்கெடுத்துள்ள ஆறுகள் மற்றும் மலைப்பகுதிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA