Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
மைதிலி சரண் குப்ஸ் (Maithili Sharan Gupt) நவீன இந்தி இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் புகழ்பெற்ற தேசியக் கவிஞர் (ராஷ்ட்ரகவி) ஆவார்.
இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில், தேசபக்தியைத் தூண்டும் இவருடைய கவிதைகள் இந்திய மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தின.
விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கவிஞருமான மைதிலி சரண் குப்த் 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அருகே சிர்கான் என்ற ஊரில் பிறந்தார்.
இவரது தந்தை சேத் ராம்சரண் தாஸ் மற்றும் தாயார் காசி பாய் ஆவர்.
இவருடைய தந்தையும் ஒரு கவிஞராக இருந்ததால், சிறுவயதிலேயே கவிதை எழுதும் ஆர்வம் இவருக்கு இயல்பாகவே வந்தது.
இவரது முதல் முக்கிய படைப்பு 'ரங் மைன் பாங்'
(Rang mein Bhang) ஆகும்.
அதை தொடர்ந்து சாகேத், பாரத் பாரதி, ஜெயத்ரத்வத், கிஸான், விகட் பட் போன்ற பல நூல்களை படைத்துள்ளார்.
இந்தி இலக்கியத்தில் 'கடிபோலி' (Khari Boli) என்ற பேச்சு வழக்கு மொழியை கவிதைக்கான இலக்கிய மொழியாக மாற்றிய முன்னோடிகளில் இவரும் ஒருவர்.
இந்தியாவின் கடந்த கால பெருமைகளையும், தற்போதைய அடிமை நிலையையும் விவரிக்கும் இவருடைய பாரத்-பாரதி என்ற நூல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது
மகாத்மா காந்தி, வினோபா பாவே போன்ற தலைவர்களால் ஈர்க்கப்பட்டு இவர் பல விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.
'ராஷ்டிர கவி' என்று புகழாரம் சூட்டப்பட்டார்.
முக்கிய படைப்புகள்:
சாகேத் (Saket - மகா காவியம்), யசோதரா (Yashodhara), பஞ்சவடி (Panchavati), ஜெயத்ரத் வத் (Jayadrath Vadh) ஆகியவை இவரது புகழ்பெற்ற நூல்களாகும்.
இராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளில் அதிகம் கவனிக்கப்படாத பெண் பாத்திரங்களான ஊர்மிளை, யசோதரை ஆகியோரை மையமாகக் கொண்டு இவர் காவியங்களை படைத்துள்ளார்
மேலும், இவருக்கு 1954ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூஷண் விருது அளிக்கப்பட்டது.
இந்திய குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டு, 1952 முதல் 1964 வரை பணியாற்றினார்.
இவரது இலக்கியச் சேவையைப் போற்றும் வகையில், இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆண்டுதோறும் இந்தியாவில் கவிஞர் தினமாக (Kavi Diwas) கொண்டாடப்படுகிறது.
தன் வாழ்நாள் கடைசி வரை எழுதிக்கொண்டே இருந்த இவர்
டிசம்பர் 12, 1964 அன்று தனது 78 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக இவர் காலமானார்.
Hindusthan Samachar / Durai.J