Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய அரசியலமைப்பையும் காக்க சூழ்ச்சிகளை வீழ்த்தி உறுதியோடு போராடுவோம் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், அவைக்கு வந்திருந்த 528 உறுப்பினர்களில் ஆதரவாக 298 வாக்குகளும் (56.44%), எதிராக 230 வாக்குகளும் பதிவாகின. அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்குத் தேவையான 66.67% (மூன்றில் இரண்டு பங்கு) பெரும்பான்மை கிடைக்காமல், வெறும் 56.44% வாக்குகளை மட்டுமே பாஜக கூட்டணி பெற்றதால், 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவைத் தோற்கடித்து இந்திய ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் நாம் வெற்றிபெறச் செய்தோம். அன்றைய தினத்தில் அவைக்கு உறுப்பினர்கள் அனைவரும் நேரில் வருகை தந்து வாக்கெடுப்பில் பங்கேற்றதும், எதிர்க்கட்சிகளின் உறுதியான ஒற்றுமையும்தான் அந்தச் சூழ்ச்சியை முறியடித்தது. ஏனெனில், இந்த மசோதாவைத் தோற்கடிக்க நாடாளுமன்ற அவைக்கு உறுப்பினர்கள் நேரில் வருகை தருவது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
ஆனால், சமீபகாலமாகப் பாஜக தனது அத்துமீறிய ஜனநாயக விரோத முறைகள் மூலம் சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 540 ஆக உள்ளது. இதில் 66.7% (2/3) பெரும்பான்மைக்கு 360 வாக்குகள் தேவை என்ற நிலையில், @narendramodi தலைமையிலான NDA கூட்டணிக்கு 318 (58.89%) உறுப்பினர்களும்,
காங்கிரஸ் (98), சமாஜ்வாதி (37), திரிணாமுல் (8) உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகளைக் கொண்ட INDIA கூட்டணிக்கு 184 உறுப்பினர்களும் உள்ளனர்.
இங்கு எஞ்சியுள்ள 38 உறுப்பினர்களின் நிலைப்பாடுதான் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது.
இந்த முக்கியமான கட்டத்தில், எஞ்சியுள்ள பிரிவினர் எதிர்த்து வாக்களிப்பதோ அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்து விலகியிருப்பதோ மோடி அரசுக்கு மறைமுகமாக 2/3 பெரும்பான்மையைப் பெற்றுத் தரவே வழிவகுக்கும். தமிழ்நாட்டு மக்களும் இந்திய தேசமும் உங்களை உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன. மக்களுக்கு அளித்த வாக்கையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் காக்க கொள்கைப் பிடிப்போடு நிற்கப்போகிறீர்களா?
அல்லது
மோடியின் அரசியலமைப்புத் தாக்குதலுக்குத் துணைபோகப் போகிறீர்களா?
வரலாற்றில் துரோகத்தின் அடையாளமாக எட்டப்பன் எப்படி நூற்றாண்டு கடந்தும் நினைவுகூரப்படுகிறானோ, அதேபோலத் தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய அரசியலமைப்பையும் அடகுவைத்து மோடி அரசுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவும் எவரும் வரலாற்றுப் பிழையிலிருந்து தப்பிக்கவே முடியாது.
தமிழ்நாட்டின் குரலாய், மக்களாட்சியின் காவலனாய் நாம் இறுதிவரை களத்தில் நிற்போம்!
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam