சாதி, மதமற்றவர் சான்று வழங்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் - நடிகர் பார்த்திபன் பொதுநல மனு மீது இன்று விசாரணை
சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச) சென்னை உயர்நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழகத்தில் சாதி, மதமற்றவர் என்பதற்கான சான்றிதழை உடனடியாக வழங்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை இயற்ற அரசுக்கு உ
New law needed to issue certificates


சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச)

சென்னை உயர்நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழகத்தில் சாதி, மதமற்றவர் என்பதற்கான சான்றிதழை உடனடியாக வழங்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை இயற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

இதற்கு முன்பு நடிகர் பார்த்திபன் தனிப்பட்ட முறையில் சாதி, மதமற்றவர் சான்றிதழ் கோரி சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் கடந்த மார்ச் 20ம் தேதி விண்ணப்பித்திருந்தார்.

தான் 1958ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பிறந்ததாகவும், தனது பிறப்பு பதிவு செய்யப்படவில்லை என்றும், பள்ளிக்கல்விக்குப் பிறகு அது தொடர்பான சான்றிதழ்களை தான் பெறவில்லை என்றும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தன்னிடம் சாதி, மதத்தை குறிப்பிடும் எந்தவொரு அரசு ஆவணமும் இல்லை என்றும், ஜாதி, மத, மொழி அடிப்படையிலான பிளவுகள் தேச ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழவே இந்த சான்றிதழை கோருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

வட்டாட்சியர் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து, தனது விண்ணப்பத்தை பரிசீலித்து சான்று வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, இதுபோன்ற சான்றிதழை கேட்பதற்கு பெரிய மனது வேண்டும் என பார்த்திபனை பாராட்டி, ஒரு வாரத்தில் அவருக்கு சாதி, மதமற்றவர் சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சான்று தேவையில்லை, நடத்தை தான் முக்கியம் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது.

நாம் சாதி, மதம் அற்றவர் என்பதை நம் நடத்தையில் காட்ட வேண்டுமே தவிர, அதற்கு சான்றிதழ் அவசியமில்லை என்றும், இந்த உணர்வு ஒவ்வொரு தனிநபருக்கும் வர வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

தனக்கு சான்றிதழ் கிடைத்தாலும், இனி வரும் காலங்களில் தன்னைப் போல சாதி, மதமற்றவர்களாக அடையாளம் காண விரும்பும் சாதாரண மக்களுக்கு உடனடியாக சான்று கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், இதற்கென தனி சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பார்த்திபன் தற்போது பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சாதி, மதமற்றவர் என சான்று வழங்க புதிய சட்டம் இயற்றுவது பெரிய நிவாரணமாக இருக்கும் என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

Hindusthan Samachar / vidya.b