Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நெற்கதிர்களை கொண்டு, கேரளாவின் 33 முக்கிய கோவில்களில் இன்று பாரம்பரிய நிறை புத்தரிசி பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பாரம்பரியமாக ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவில், அச்சன்கோவில் ஐயப்பன் கோவில், ஆரியங்காவு ஐயப்பன் கோவில் உள்ளிட்ட 33 கோவில்களுக்கு நிறை புத்தரிசி பூஜைக்காக தமிழகத்தில் இருந்து நெற்கதிர்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டு தென்காசி மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் விளைந்த நெற்கதிர்கள் சிறப்பு ஊர்வலமாக வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டன.
ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் மேல்சாந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நிறை புத்தரிசி பூஜை சிறப்பு முறையில் நடைபெற்றது.
வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற பூஜையில், புதிய அறுவடையை குறிக்கும் நெற்கதிர்கள் சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பூஜை நிறைவடைந்த பின்னர், பூஜிக்கப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
இந்த பிரசாதத்தை பெற்றால் விவசாய வளமும் குடும்ப நலனும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தமிழகம் – கேரளா இடையேயான பல நூற்றாண்டு பழமையான ஆன்மிக மற்றும் பண்பாட்டு உறவை வெளிப்படுத்தும் இந்த நிறை புத்தரிசி பூஜை, பக்தர்களின் பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
Hindusthan Samachar / ANANDHAN